14 நவ., 2010

நான் செய்த கொலை

நான் அந்த பெண்மணியைக் கொல்வேன் என்று நினைக்கவில்லை. ஒரு சில நொடிகளுக்குள்ளாகவே, அந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது. கொலை செய்த இடத்திலிருந்து இரண்டு, மூன்று கிலோமீட்டர் தள்ளி வந்து விட்டேன். யாருமற்ற இந்த அத்துவானப் பிரதேசத்தில் இலக்கின்றி நடந்து கொண்டிருக்கிறேன். காலுக்கடியில் சருகுகள் சரசரக்கின்றன. பயம், குழப்பம், கோபம், விரக்தி எனப்பல கலவையான உணர்ச்சிகள் மனதுக்குள் வீசியடிக்கிறது.

என்னைத் தேடி யாரேனும் வருவார்களோ? காது மடல்களில் சூடான இரத்தம் ஜிவ்வென்று பாய ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். கோபத்தில் என் கீழுதடு மெலிதாகத் துடிப்பதை என்னால் உணர முடிந்தது. யாரும் பின்தொடர்ந்து வரவில்லை. ஆனால் வரக்கூடும். அதற்குள் கண்ணுக்கெட்டாத தொலைவு சென்று விடவேண்டும்.

சத்தியமாக நான் வேண்டுமென்று செய்யவில்லை. எப்போதும் நான் பயணிக்கின்ற பாதையின் குறுக்கே சாலை அமைக்கும் பணிக்காக தடை ஏற்படுத்தப் பட்டிருந்தது சென்ற மூன்று மாதங்களில் நான் ஓரிரு முறை அந்த சாலை வரை சென்று விட்டு, பாதை மாறி வந்து விட்டேனோ என்று குழப்பத்துடன் திரும்பி வந்திருக்கிறேன். ஆனால் இன்று கிளம்பும் போது என்னோடு அவளும் வர சம்மதித்தது, நான் அந்தத் தடையைத் தாண்டிச் செல்ல ஒரு முக்கிய காரணம். புதிய இடங்களுக்கு அவளை அழைத்துச் சென்று, குஷிப்படுத்தி அவளுடன் எனக்குள்ள உறவை இன்றும் ஸ்திரப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எண்ணம் மேலிட்டதே இன்று
இந்த கொலை நடக்கக் காரணமாகிவிட்டது.

எங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் பாதி கிராமமும், பாதி நகரமுமாய் இருந்த பகுதிக்குத்தான் நாங்கள் எப்போதும் உணவு தேடிச் செல்வோம். ஒருவகையில் பார்த்தால் நாங்கள் செய்து கொண்டிருப்பது திருட்டுதான். ஒவ்வொரு தடவையுமே நாங்கள் கூட்டமாகத்தான் செல்வோம். அந்தப் 
பகுதி வாசிகள், எங்கள் காட்டுத்தனமான பலத்தையும், மூர்க்கத் தனத்தையும் கண்டவுடனேயே தலைதெறிக்க ஓடி மறைவார்கள். எங்கள் கொள்ளையை முடித்துவிட்டு நாங்கள் திரும்பும் வரை, அவர்கள் தூரத்தில் நின்று கூச்சலிடுவார்களே தவிர வந்து தாக்குவதற்கெல்லாம் துணிய மாட்டார்கள். அது ஏனோ தெரியவில்லை, அந்த மக்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது எங்கள் கூட்டத்திற்கு நன்கு தெரிந்திருந்தாலும் பகலில் மட்டும் அந்தப் பகுதிகளுக்குள் நுழைவதில்லை. எல்லாமே இரவில்தான். விடிய சற்று நேரமிருக்கும்போதே நாங்கள், எங்கள் இருப்பிடம் திரும்பிவிடுவோம்.

எங்கள் கூட்டத்திலிருக்கும் வயது மூத்தவர்கள், அந்த ஊர் இருக்கும் நிலப்பகுதி எல்லாமே ஒரு காலத்தில் நம்முடையதுதான் என்றும், அந்தப் பகுதியில் இப்போது வசிப்பவர்களின் முன்னோர்கள், நம்மை கொஞ்சம்கூட தயவு தாட்சண்யமின்றி, விரட்டியடித்து விட்டு அந்த நிலப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்றும் சொல்வதுண்டு. ஆனால் நான் பிறந்ததில் இருந்தே இந்த அத்
துவானப் பகுதிதான் எங்கள் வசிப்பிடம்.

இன்று நான் செய்த காரியத்திற்கு பின் எங்களை இங்கும் வசிக்க அனுமதிப்பார்களா என்பது கேள்விக்குறிதான். முன்னிரவு வரை பெய்திருந்த மழை, இடைவேளை விட்டு மீண்டும் சடசடக்கத் துவங்கியது. நிச்சயம் மழை வேகம் பிடித்து விட்டால் அவர்கள் எங்களைத் தேடி வர மாட்டார்கள்.

அவளை நான் வேறு வழியாக எங்கள் இருப்பிடத்திற்கு அனுப்பி விட்டிருந்தேன். என்னை விட்டுப் பிரிகையில் மிகவும் பயந்து போயிருந்தாள். இவ்வளவு பெரிய அசம்பாவிதத்திற்கு பிறகும் கூட அவளுக்கு என்னுடன் இருக்கத்தான் விருப்பம். ஆனால் நான் இருந்த குழப்பமான மனநிலையில் அவள் என்னோடு இருப்பது சரியெனப் படவில்லை. அவளைப் போகச் சொல்லி கொஞ்சம் மூர்க்கமாகவே கத்தி விட்டேன். விழியோரத்தில் கண்ணீர் கசிந்த அவள் முகம் இந்தக் குழப்பத்தையும் மீறி மனதைப் பிசைந்தது.

கால்கள் சோர்ந்து போனதால் சற்று உட்கார வேண்டும் போல இருந்தது. என்னை நன்கு மறைத்துக் கொள்ளக் கூடிய இடம் தேடி அமர்ந்தேன். மூச்சிறைப்பும், படபடப்பும் கொஞ்சம் குறைந்தது போலிருந்தது. காலில் இருந்த ரத்தத் திட்டுகளை மண்ணில் அழுந்தத் துடைத்தேன். சில மணி நேரத்திற்குள் நடந்து முடிந்துவிட்ட நிகழ்ச்சிகள் மனதில் மெல்ல நிழலாடத் துவங்கின.

அவளோடு நான்
சென்று கொண்டிருந்தபொழுது சாலை போடுவதற்காக எங்கள் பாதையின் குறுக்கே போடப்பட்டிருந்த தடையைத் தாண்டும் போது கூ எதிர்வரும் விபரீதத்தை உணரவில்லை. நடந்து செல்கையில் அவள் உடம்போடு ஏற்பட்ட சின்ன சின்ன உரசல்கள் என்னை வேறெதைப் பற்றியும் சிந்திக்க விடவில்லை.

சாலையில் வழக்கத்திற்கு மாறாக மழையினால் போக்குவரத்து அதிகமாக இருந்தது. வழக்கமாக அந்த நேரத்தில் போக்குவரத்து அடங்கி, சாலை அமைதியாகி இருக்கும். வாகனங்களின் விளக்கு வெளிச்சமும், ஹாரன் சத்தங்களும் அவளுக்கு வியப்பையும், கலவரத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியிருந்தன. அவள் விரைவாக சாலையைக் கடந்து சென்று விட விரும்பினாள். இருவரும் நடையை வேகப்படுத்தினோம். வாகனங்களுக்கு இடையே நாங்கள் புகுந்து செல்லும் போது உள்ளிருந்தவர்கள் தலையை வெளியே நீட்டி
கூச்சலிட்டார்கள். அவள் பதற்றத்துடன் இன்னும் என்னோடு நெருக்கமாக ஒட்டிக் கொண்டாள்.

பாதிக்கு மேல் சாலையைக் கடந்த பின் மழையினால் பார்வை தடுமாறிய ஒரு வாகனஓட்டி மிகவும் அருகில் வந்து ஹாரன் அடித்தபடியே கிரீச்சென ப்ரேக் இட்டு நிறுத்தினான். அவள், அந்த சத்தத்தில் தூக்கி வாரிப் போட்டது போல துள்ளி விழுந்து, எனக்குப் பின்னால் தன்னை பதுக்கிக் கொண்டாள். எனக்கு அந்த வாகனஓட்டியின் மீது கோபம் இருந்தாலும், அப்போதைக்கு அந்த இடத்தை விட்டு வேகமாக கடந்து விடவே விரும்பினேன்.

வேகமாக சாலையைக் கடந்து அருகிலிருந்த குடியிருப்பை ஒட்டியிருக்கும் தோட்டத்திற்குள் சென்று விட வேண்டும் என்பதே எனது குறியாக இருந்தது. இதற்கு முன்பு இந்த kudiruppin வழி
யாக சென்றதில்லை என்றாலும் கூட அந்த குடியிருப்பை ஒட்டித்தான், தோட்டங்கள் இருக்க வேண்டும். இந்த இரைச்சலை விட்டு விரைவாக விலகிச்செல்ல வேண்டும். தோட்டத்தில் பரவி இருக்கும் இருளும், மழை பெய்கின்ற இந்த குளிர்ந்த சூழ்நிலையும், எங்கள் இருவரின் தனிமையை இன்னும் அழகாக்கும்.

அவளோடு பேச்சுக் கொடுத்து அவளது மிரட்சியை மட்டுப்படுத்தியபடியே குடியிருப்புக்குள் நுழைந்தேன். இன்னும் வாகன ஓட்டிகள் கூச்சலிட்டுக் கொண்டிருப்பது பின்னால் மெலிதாகக் கேட்டது. மழையினால் குடியிருப்புப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை. நான் கொலை செய்த அந்த பெண்மணி மட்டுமே தனது நாயை அழைத்து வந்து குடியிருப்புக்கு முன்பிருந்த வெட்டவெளியை கழிப்பிடமாக்கிக் கொண்டிருந்தாள். நான் குடியிருப்புக்குள் நுழையும் போதே அந்தப் பெண்மணியும், நாயையும் கவனித்திருந்தேன். அவர்களைத் தவிர்த்து விட்டு, தோட்டத்திற்குள் சென்று விடவேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.

அந்த நாய், அதற்குள் எங்களிருவரையும் கவனித்து குரைக்க ஆரம்பித்தது. அந்த பெண்மணியும் கூட அந்த நேரத்தில் எங்களை எதிர்பார்க்கவில்லை. கையில் இருந்த குடையை எங்களை நோக்கி விசிறியபடி அந்தப் பெண்மணியும் கூச்சலிடத் துவங்கினாள். 
என்னவள் ஏற்கெனவே மிரண்டிருந்ததால் எனக்குப் பின்னால் பதுங்கினாள்.

இவளை தைரியப்படுத்த வேண்டி, முன்னால் இரண்டடி சென்று நானும் சத்தமிட்டேன். நாய் என்னை நோக்கிப் பாய்ந்தது. பெண்மணி குடையை மடக்கி என்னை நோக்கி வீசினாள். நெட்டித் தள்ளினேன். சில அடிகள் தள்ளிப் போய் விழுந்தாள். நாய் என்னை நோக்கி முன்னேறியது. அந்தப் பெண்மணி கூச்சலிட்டு அந்தக் குடியிருப்பில் இருந்த மற்றவர்களையும் அழைத்தபடியே, என்னை நோக்கி மறுபடியும் ஓடி வந்தாள்.

அவள் நாயைக் காப்பாற்ற வந்தாளோ, அல்லது என்னைத் தாக்க வந்தாளோ, என்பதை நானறியேன். மழையினால் உண்டாகியிருந்த சேற்றில் அவள் வழுக்கி என் காலருகில் விழுந்தாள். நாயையும், அவளையும் ஒருசேர விரட்ட எத்தனித்த எனது காலும் இடறியது.
நாயைக் கொஞ்ச தூரம் துரத்திவிட்டு திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண்மணி விழுந்தது, விழுந்தபடியே கிடந்தாள். அருகில் சென்று அசைத்துப் பார்த்தேன். உடம்பு துவண்டு கிடந்தது. செம்மண் சேறு, தலைக்குக் கீழிருந்து வந்துகொண்டிருந்த ரத்தத்தால் இன்னும் சிவப்பாகிக் கொண்டிருந்தது.

மீண்டும், மீண்டும் அசைத்துப் பார்த்தேன். அசையவில்லை. இவள் ஒடுங்கிப்போய் அங்கிருந்த மரத்தின் பின்னால் தன்னை ஒளித்துக் கொண்டிருந்தாள். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. நிலையின்றி தவித்தேன். மறுபடியும் அந்த உயிரற்ற உடலை அசைத்துப் பார்த்தேன்.

அந்த நாயின் குரைப்பினாலும், அந்த பெண்மணி போட்ட சத்தத்தினாலும், குடியிருப்புக்குள் இருந்து எட்டிப் பார்த்த மக்கள், எங்களைக் கண்டதும் கூச்சலிட்டபடியே ஓடிவந்தார்கள். எங்களை நோக்கி பட்டாசுகளை வீசியபடியும், தீப்பந்த
ங்களை ஆட்டியபடியும் நெருங்கி வந்தனர். அதற்குமேல் அந்த இடத்தில் நிற்பது எனக்கு சரியெனத் தோன்றவில்லை. அவளை அழைத்துக்கொண்டு, எங்கள் இருப்பிடமான காடு நோக்கி ஓட ஆரம்பித்தேன். அந்த பகுதிவாசிகள் முன்னிலும் அதிகமான பட்டாசுகளை, எங்களை நோக்கி வீசினார்கள்.

மழை மேலும் வலுத்து சடசடத்த சத்தம் என்னை சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. மெல்ல எழுந்தேன். அருகில் இருந்த மரக்கிளை ஒன்றை ஒடித்து கடைவாயில் அதக்கினேன். மழைநீரோடு இருந்த அந்த கிளை தாகத்திற்கு இதமாக இருந்தது.

ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். யாரும் பின்தொட
ர்வதாகத் தெரியவில்லை. காட்டின் உட்பகுதி நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நான் ஏன் அந்தப் பெண்மணியை கொலை செய்தேன். நடையின் வேகத்தை எனது எண்ணங்கள் மட்டுப்படுத்துவதை என்னால் உணர முடிகிறது. இருப்பினும் நான் விரைவாக அவள் இருக்கின்ற இடத்திற்கு சென்று சேர வேண்டும்.

சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை எழுதப்பட்டுள்ளது. இந்த கதையின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இங்கே சொடுக்கவும்.

இம்மாதிரியான மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடைப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் நமக்கொன்றும் புதிதில்லை. ஆனால் இன்னொரு முறை இதுபோல நடக்காமலிருக்க நாம் என்ன செய்யப்போகிறோம்? உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள். நன்றி.

20 நவ., 2008

சிறுத்தையும் நானும் - எனது டிரக்கிங் அனுபவம் - 02

சும்மா பேச்சு மட்டும் இருந்தா அது சபைக்கு அழகா..?! நெப்போலியனும், கிங்பிஷரும், இன்னபிற பரிவாரங்களோடு சபையில் கலந்தார்கள்.

ஞானா அன்னைக்கு ராத்திரி ஏழு மணிக்கு ஹனீபா-னு ஒருத்தரை வரச் சொல்லிருந்தாரு. நைட் சபாரி-ன்னு சொல்லுவாங்களே.. அதுக்குத்தான். வழக்கம்போல என்னோட பேச்சுத் திறமையால ஜீப்-ல முன்னாடி சீட்ட புடிச்சு உக்காந்துகிட்டேன். எங்க எல்லாருக்குமே மனசுக்குள்ளே., நைட் சபாரி போனா புலி வந்து சலாம் போடும், கரடி வந்து குசலம் விசாரிக்கும்னு ஒரு நினைப்பு. ஆனா உண்மை என்னன்னா ஞானா இவ்ளோ வருஷமா ட்ரக்கிங் போயும் பூனை குடும்பத்துல (கேட் பேமிலி) ஒன்னு கூட பார்த்ததில்ல.

10 நவ., 2008

சிறுத்தையும் நானும் - எனது டிரக்கிங் அனுபவம் - 01

அக் 17 காலை ஐந்தரை மணி.
கோவையிலிருந்து ஊட்டி செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில், தொடர்ந்து ஒரு வாரமாக விட்டுவிட்டுப் பெய்த மழையில், சாலையெல்லாம் குட்டையாக மாறிப் போயிருந்தது. இருட்டினுள் தவறித் தண்ணீரில் கால் வைத்து விடக்கூடாது என்ற எண்ணத்துடனும் கையில் பையுடனும் நின்று கொண்டிருந்தேன். (ஏன்..?! கால் வச்சா என்னவா..?? ஜன்னி வந்திருக்கும்பா..)

சென்னையிலிருந்து ரயிலில் வரும் என் நண்பர்(கள்) கோவையிலிருந்து ஊட்டி செல்லும் வழியில் என்னை பிக்-அப் செய்து கொள்வதாகத் திட்டம்.

எனது நண்பர் ஞானா (முழுப்பெயர்: ஸ்ரீ ஞான வித்ய பிரகாஷ் :- பேருதான் நீளமா இருக்கு. ஆனா, ஆள் அகலமா இருப்பாரு.), அவரது அலுவலக நண்பர்களுடன் டவேரா-வில் வந்து என்னை அந்த இருட்டிலும் கண்டுபிடித்து இறங்கினார். "ஞானா" என்னை அவரது நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய, இருட்டில் முகம் தெரியாமலே கை குலுக்கிக் கொண்டேன்.

எங்களது மூன்று நாள் "ட்ரக்கிங்" பயணம் துவங்கியது.

பயணத்திட்டம் இதுதான். முதல் இரண்டு நாட்கள் முதுமலை "அபியாரன்யம்" விடுதியில் தங்கிவிட்டு மூன்றாவது நாள் ஊட்டி வந்து அங்கிருந்து "வெஸ்டர்ன் காட்ச்மென்ட்" செல்வது.

ஆச்சா..? அங்கங்கே நின்னு தம் அடிச்சு, டீ குடிச்சு, டிபன் சாப்பிட்டு, வெட்டிக் கதை பேசி, பேசிச் சிரிக்கறதை போட்டோ எடுத்துகிட்டு ஒருவழியா மதியம் ஒரு மணி போல வந்து சேர்ந்தோம். ஆங்.. மறந்துட்டேன் பாருங்க.. வர்ற வழியில "கல்லட்டி"க்கும், "மசினகுடி"க்கும் நடுவுல ஒரு அழகான புள்ளிமான் கூட்டத்தை பார்த்தோம்.


கிருஷ்ணன்னு ஒருத்தர். முதுமலை "அபியாரன்யம்" விடுதி அவரு பொறுப்புலதான் இருக்கு. சமையல், காவல், இன்சார்ஜ்ன்னு எல்லாமே அவர்தான். மதியம் வந்து சேர்ந்த உடனே சாப்பாடு மெனு சொல்லிட்டோம். அப்புறம் அதுதானே முக்கியம் . மட்டன் குழம்பும், சில்லி சிக்கனுமா விருந்து சாப்பாட முடிச்சுட்டு...(கொஞ்சம் இருங்க..மூச்சு விட்டுக்கறேன்) பொது விவகாரம், காட்டுக்குள்ளே அவனவனுக்கு கிடைச்ச அனுபவம் பத்தி பேச ஆரம்பிச்சோம்.

யோவ்..?! தலைப்புல ஏதோ டிரக்கிங் அனுபவம்னு போட்டிருந்தே..?!! இப்போ சோறு தின்ன கதைய சொல்லிக்கிட்டுருக்கே.. ன்னுதானே நெனைக்கறிங்க.. இருங்க.. மேட்டர் (சிறுத்தை) வருது.

29 அக்., 2008

அஃறிணை

புழுதியும், தூசியும் படிந்து உப்பிப்போன தலைமுடி, காதின் இடுக்கில் சொருகி இருக்கும் சிகெரெட் துண்டு, தடித்த கீழுதடு, அதை எப்போதும் அழுத்தியபடி இருக்கும் தெற்றுப்பல் வரிசை, சாலையிலே படுத்துக்கிடந்ததாலும் , பல நாட்கள் தண்ணீரையே காட்டததாலும் முகமெங்கும் கருப்பாய் அப்பிப்போன அழுக்குத்தீற்றல்கள்.

ஆப்பிரிக்காவின் பஞ்ச தேசங்களை நினைவூட்டும் தேகம். அணிந்திருந்த ஆடையில் அங்கங்கே கிழிசல்களில் ரத்தம் வெளிவந்ததும், தோல் உரிந்து போனதுமாய் சில காயங்கள்.

அக்குளில் எப்போதும் சிறைபட்டிருக்கும் நைந்துபோன பை, காகிதங்களும், ஒன்றிரண்டு ஆடைகளும், இப்பூவுலக ஜீவிதத்துக்கு உதவாதவை என்று தூக்கியெறியப்பட்ட பலவும் அந்தப் பையினுள் அடக்கம்.

கால்களை ஒடுக்கி, அக்குள் பையை சுருட்டி அணைத்தவாறு புரியாத மொழியில் தம் கட்டி உளறிக்கொண்டிருக்கும் அவனைக் கடந்து செல்கிறவர்கள் மூக்கைப் பொத்திக் கொள்கிறார்களோ இல்லையோ, தவறி மனிதனாய்ப் பிறந்துவிட்ட விசித்திர ஜந்துவோ என்பதுபோல ஒரு பார்வையை வீசிச் செல்வது மட்டும் வழக்கம்.

இந்த ஜீவராசியைப் பற்றி சொல்லிவிட்டு அவன் உடமைகளோடு உடமையாக கூடவே இருக்கும் இன்னொரு உயிரைப் பற்றிச் சொல்லாவிட்டால் நட்பைப் பழித்த பாவம் வந்து சேரும். டீக்கடை பாய் சொல்லித்தான் இந்த நட்பின் கதை எனக்குத் தெரியும்.

ரெண்டு வருஷத்துக்கு முன்ன மெத்ராஸில பேய் மழை அடிச்சுச்சு தம்பி, அப்போ அது ரொம்ப சின்னது... பொறந்து ஒரு பத்து நாள்தான் ஆகியிருக்கும். எங்கியோ இருந்து மழைத்தண்ணியில அடிச்சிக்கிட்டு வந்துருச்சு. அப்போ "சாங்கி" (தொடக்கத்தில் பெரிதாக வர்ணிக்கப்பட்ட ஜீவராசியின் திருநாமம்) நம்ம சேட்டுக்கடை இடுக்குலதான் ஒண்டிக்கிட்டு இருந்துது. கொஞ்சம் விட்டுருந்தா ஆளையே விழுங்குற சாக்கடைக் குழிக்குள்ள போயிருக்கும். அதுதான் தூக்கி விட்டுச்சு. அப்போருந்து ரெண்டும் ஒண்ணுமன்னாத்தான் இருக்கு. புத்தி சுவாதீனமில்லேன்னாலும் அதுங்க ரெண்டுக்குள்ளே இருக்குற பாசத்தைப் பாக்கனுமே.

இப்பொழுதெல்லாம் சிகரெட் பிடிக்க பாய் கடைக்குச் செல்லும்போது அந்த ஜீவன்கள் இருக்கும் இடத்தைப் பார்ப்பது தவிர்க்க முடியாமல் ஆகிவிட்டிருந்தது.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கே உரிய முகச்சாயலைக் கொண்டிருந்த அவன் இதுவரையில் கை நீட்டி பிச்சை கேட்டு நான் பார்த்ததில்லை. அது எனக்கு வியப்பாகத்தான் இருந்தது.

பாய் தினந்தவறாமல் கொடுக்கும் டீயும், மீந்து போன வடைகளும், சாந்தி மெஸ்ஸின் மிச்சங்களும்தான் இந்த இரண்டு உயிர்களின் உணவுப்பாட்டைத் தீர்க்கும் முக்கியக் காரணிகள்.

இரண்டறக் கலந்தது போல் அந்த நாயோடு உட்கார்ந்து, உச்சுக் கொட்டிக் கொண்டு, உரக்க பேசியபடியே சாந்தி மெஸ்ஸின் மிச்சங்களை சாப்பிடும்போது, அந்த சாப்பாட்டின் லட்சணத்தை நாயிடம் சொல்லி குறைபட்டுக் கொள்வதாகவே எனக்குத் தோன்றும்.

அன்றும் பாய் கடையில் நின்று வழக்கம்போல் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். பையினுள் ஆழமாக கையைவிட்டுத் தேடியபடியே சாங்கி கடையை நோக்கி வந்துகொண்டிருந்தது. காலிலே ஒன்றிரண்டு காயங்கள் புதிதாகத் தெரிந்தன.

பைக்குள் இருந்த டம்ளரை எடுத்து பாயிடம் நீட்ட, டீ போட்டுக் கொண்டுவர அவர் உள்ளே போனார். நான் கண்களை அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நான் பார்ப்பதை கவனித்ததும் கழுத்தை உள்ளிழுத்து சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு பின் வெகுளியாக சிரித்தது. அடிக்கடி பார்க்கிற ஒரு விஷயந்தான் என்றாலும் அன்று எனக்கு என்னவோ செய்தது. டீயை வாங்கிக்கொண்டு திரும்பும்போது மறுபடியும் ஒருமுறை கழுத்தை உள்ளிழுத்து, என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சென்றது.

எனது ரூமில் சில பழைய சட்டைகள் கிடந்ததே!. இதற்கு கொடுக்கலாமா? கொடுத்தால் வாங்கிக் கொள்ளுமா..? தயக்கமாகத்தான் இருந்தது. மாலையில் வேலை முடிந்து திரும்பியதும் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தபடி கிளம்பினேன்.

எங்கள் இழவெடுத்த ஆபீஸில் மாதம் ஒருமுறை வந்து தொலைக்கும் அதே வேலை. தேங்கிவிட்ட பையில்களை எல்லாம் முடித்து நாளைப் பொழுதுக்குள் ஹெட் ஆபிசுக்கு அனுப்பியாக வேண்டும். இரவு வெகுநேரம் வரை வேலை செய்துவிட்டு, அங்கேயே தூங்கி காலையில் குளித்துத் தயாராகி மறுநாள் வேலையையும் பார்த்துவிட்டு வந்தேன். எங்கள் ஆபீஸில் தூங்க, குளிக்க என எல்லா வசதிகளும் இருந்தன. வேலை செய்பவர்கள் வீட்டுக்குச் சென்றுவரும் நேரத்தைக் கூட உறிஞ்சத் துடிக்கும் நல்லிதயம் எங்கள் மேலதிகாரிகளுக்கு.

உடை மாற்றிக் கொண்டு பாய் கடைக்கு வந்த பொழுது, வழக்கமான இடத்தில் சாங்கியைக் காணவில்லை. நாய் மட்டும் சுருண்டு படுத்துக் கிடந்தது. ஆர்வத்தில் பாயிடம் கேட்டேன்.

அட, என்னன்னு சொல்ல தம்பி!.., அந்த சேட்டுக்குதான் இதுகளக் கண்டாலே ஆகாதே!.. அவன் கடை சந்துல அண்டாதீங்கன்னு வெரட்டிக்கிட்டே இருப்பான். இதுகள விரட்டுறதுக்குன்னே தனியா குச்சி வேற!.. இதுகளாவது வேற எங்காவது போயி தொலையலாமில்ல?.. நேத்து கடைக்கு வந்தவுங்கள சாங்கி வழக்கம் போல உத்துப் பாத்திருப்பான் போல. அதப்பாத்து வந்தவங்க மெரண்டு சேட்டுகிட்ட சொல்ல, அவன் குச்சியத் தூக்கிட்டு அடிக்க வந்துட்டான். ஓங்குன கைய நாய் கப்புனு பாய்ஞ்சு பதம் பாத்துடுச்சு. சேட்டுக்கு வந்த கோவத்துல சாங்கிய எட்டி இடுப்புல மிதிச்சுட்டான். அப்ப அலறிகிட்டு ஓடுனதுதான். இன்னமும் வரக் காணோம். நாய் மட்டும் இங்கியே படுத்திருக்கு.

திரும்பி நாயைப் பார்த்தேன். அது இன்னும் சுருண்டு உடம்பை ஒடுக்கிக் கொண்டது.

அதிகப்படியான வேலைப் பழுவினால் இரண்டு, மூன்று நாட்களாக பாய் கடைக்குப் போக முடியவில்லை. இன்று போயிருந்த பொழுது தற்செயலாக என் பார்வை சாங்கியின் இருப்பிடம் நோக்கிச் சென்றது.

அங்கே தலையை ஆட்டி, ஆட்டி நாயிடம் உரக்கப் பேசிக் கொண்டிருந்த சாங்கியைப் பார்த்தும், பழைய நண்பனை பலநாள் கழித்துப் பார்த்துவிட்ட ஒரு சந்தோஷம் எனக்குள். மூச்சுக் குழாயில் காற்றுப் பந்து ஒன்று அடைக்க என்னையும் அறியாமல் சந்தோஷத்தில் எனது கண்களில் நீர் திரண்டிருந்தது.

உடனே ஓடிபோய் ரூமில் இருந்த பழைய சட்டைகள் இரண்டைக் கொண்டுவந்து சாங்கியிடம் நீட்டினேன். தனது நாயோடு வார்த்தையாடுவதற்கு இடைஞ்சலாக வந்த என்னை, தலையைத் தூக்கி உற்றுப் பார்த்தது. சிறிது நேரமான பின்பும் சட்டைகளை வாங்காததால், எனது தயக்கம் அதிகமானது. நீட்டிய கை நீட்டிய படியே இருக்க, எச்சில் விழுங்கினேன். மீண்டும் ஒருமுறை கழுத்தை உள்ளிழுத்து, என்னை உற்றுப் பார்த்துவிட்டு மெல்ல கையை நீட்டி சட்டைகளை வாங்கிக் கொண்டது.

அவைகளை உருட்டியும், திருப்பியும் பார்த்துவிட்டு, என்னைப் பார்த்து வெகுளியாய் சிரித்தது.

சட்டைகளை நன்றாக சுருட்டி, அதன் பையில் திணித்துக் கொண்டது. போட்டுக் கொள்ளும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கு வேறு ஏதோ எண்ணங்கள் போல. மீண்டும் நாயிடம் உரக்கப் பேச ஆரம்பித்துவிட்டது. நான் மெல்ல அங்கிருந்து நகர்ந்தேன். அதன்பிறகு நான் ஒவ்வொரு முறை பாய் கடைக்குப் போகும்போதும், வழக்கமாகப் பார்க்கும் என் பார்வையில், இன்றாவது நான் கொடுத்த சட்டைகளில் ஒன்றைப் போட்டுக் கொண்டிருக்காதா என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்து கொண்டது.

பல நாட்கள் கடந்து விட்டது. ஆபீஸில் இருக்கும்போது கூட ஓரிரு முறை சாங்கியைப் பற்றியும் சட்டைகளைப் பற்றியும் ஞாபகம் வந்தது.

இன்று கடைக்குப் போகும்போது, ரோட்டின் நடுவே ரத்தம் உறைந்தும், உறையாமலும் குளம்போல படிந்திருந்தது. இரண்டு பக்கங்களிலும் வண்டிச் சக்கரங்கள் பதித்துப் போன ரத்தத் தடங்கள் இன்னும் அருவருப்பைக் கூட்டியது. நாய் எதாவது அடிபட்டிருக்கும் என்று யதார்த்தமாக தோன்றியவுடன் எனக்கு திக்கென்று சாங்கியின் நாய்தான் ஞாபகத்திற்கு வந்தது. ஓடிச் சென்று பார்த்தேன். நாய் வழக்கமான இடத்தில் படுத்திருக்க, அதன் அருகிலேயே சாங்கியின் பையும் கிடந்தது. சாங்கியைக் காணவில்லை. 


வந்து பாயிடம் விசாரித்தேன்.

என்ன பாய் ஆச்சு..? ரோடெல்லாம் ரத்தக் கறையா இருக்கு..?

ஹூம்... யாரு பெத்த புள்ளையோ, இங்க வந்து அடிபட்டு சாகனும்னு இருக்கு.

யாருக்கு என்ன ஆச்சு பாய்..?! எனக்கு திக்..திக்கென்று அடித்துக் கொண்டது.

நேத்து ராத்திரி, கலியாணக் கோஷ்டிங்க, மிச்சத்தைக் கொட்டுறதுக்கு வந்திருக்காங்க. அதுல ஒரு பொட்டலம் ரோட்டுலயே விழ, நம்ம சாங்கி போயி அதை எடுத்துப் பார்த்திருக்கு. திங்கற பொருள்தானே!.. நடுரோடுன்னு கூடத் தெரியாம அங்கியே உக்காந்து திங்க ஆரம்பிச்சுடுச்சாம். நம்ம பக்கத்து அப்பார்ட்மெண்டு வாட்சுமேன் ஒருபாடு கத்திப் பார்த்திருக்காரு. ம்ஹூம்.. நகரவே இல்ல!.. ஏதோ கடங்காரப் பாவி நைட்டுதானேன்னு லாரிய வேகமா ஓட்டிட்டு வந்திருக்கான். சாங்கி பதறிப் போயி ஓடப் பார்த்து, பதட்டத்துல மறுபடியும் வண்டி வர்ற வழிக்குள்ளேயே வந்து விழுந்துடுச்சாம். சட சடன்னு ஒடம்பு மேலயே ஏறி எல்லாம் ஒரு நிமிஷத்துல முடிஞ்சு போச்சு. காலையில பால் வாங்கக் கடையத் திறக்கறப்பதான், காப்பரேசன்காரங்க வந்து அள்ளிக்கிட்டுப் போனாங்க. மத்ததெல்லாம் வாட்சுமேன்தான் டியூட்டி முடிஞ்சு போகும்போது வந்து சொல்லிட்டுப் போனாரு. 

எனக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்து நொறுங்குவது போல இருந்தது. கண்களில் நீர்ப்படலம் மறைக்க, தொண்டை அடைத்துக் கொண்டது.

திரும்பி அந்த ஜீவராசிகளின் இருப்பிடத்தைப் பார்த்தேன். பிதுங்கிய நிலையில் இருந்த பையில் நான் கொடுத்த சட்டைகள் சுருட்டித் திணிக்கப்பட்டிருந்தது. சாங்கியின் நாய் தலையை மட்டும் மேலே தூக்கி சன்னமான குரலில் கத்திக் கொண்டிருந்தது. சேட்டு பக்கத்தில் போகாமல் தூரத்தில் நின்று குச்சியைக் காட்டி விரட்டிக் கொண்டிருந்தான்.